tamiltimes

Monday, April 06, 2009

TN POLLS பிரணாய் ராய் கருத்து

தமிழகத்தில் ஆளும் திமுக அரசுக்கு எதிரான வாக்குகள் அதிமுகவுக்குச் செல்வதற்கு பதிலாக விஜய்காந்த் பக்கம் போய்க் கொண்டுள்ளதாகவும் இதனால் இந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு முழு வெற்றி கிடைக்காது என்றும் என்டிடிவி நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

மக்களவைத் தேர்தலையொட்டி நாடு முழுவதும் சுமார் 50,000 பேரிடம் என்டிடிவி கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது. அதை அந்தத் தொலைக்காட்சியி்ன் தலைவர் பிரணாய் ராய் மற்றும் கருத்துக் கணிப்பை ஒருங்கிணைத்த தோராப் சுபாரிவாலா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

இதன்படி கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி (காங்கிரஸ், பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்) மொத்தம் 57 சதவீத வாக்குகளைப் பெற்று தமிழகத்தில் 39 தொகுதிகளையும் கைப்பற்றியது.

அதிமுக-பாஜக கூட்டணி 35 சதவீத வாக்குகளைப் பெற்றது. அந்தத் தேர்தலில் விஜய்காந்த்தின் தேமுதிக களத்தில் இல்லை.

இந் நிலையில் திமுக கூட்டணியில் இருந்த மதிமுக, பாமக, இடதுசாரிகள் ஆகியோர் இப்போது அதிமுக கூட்டணிக்குச் சென்றுவிட்டன. திமுகவுடன் காங்கிரஸ் மட்டுமே அணி அமைத்துள்ளது. தேமுதிக தனித்துப் போட்டியிடுகிறது.

இந் நிலையில் என்டிடிவி நடத்தியுள்ள கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ள முடிவுகள்:

பாமக, மதிமுக, இடதுசாரிகள் போய்விட்டதால் திமுக கூட்டணிக்கு 6 சதவீத வாக்குகள் குறையும். மேலும் கடந்த முறை திமுக கூட்டணிக்கு வாக்களித்தவர்களில் 10 சதவீதம் பேர் விஜய்காந்துக்கு வாக்களிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் மொத்தத்தில் திமுக கூட்டணி இழக்கும் வாக்குகள் 16 சதவீதமாகும். இதனால் கடந்த தேர்தலில் 57 வாக்குகள் பெற்ற திமுக கூட்டணி இம்முறை 41 சதவீத வாக்குகளையே பெறும்.

அதே போல மதிமுக, பாமக, இடதுசாரிகள் இணைந்ததால் அதிமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் 6 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால் கடந்த முறை அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தவர்களில் 2 சதவீதம் பேர் விஜய்காந்துக்கு வாக்களிக்கப் போவதாக கூறியுள்ளனர். இதனால் அதிமுகவின் வாக்கு சதவீதத்தில் 2 சதவீதம் சரிவும் ஏற்பட்டுள்ளது.

இதனால் மொத்தத்தில் அதிமுக கூட்டணிக்கு 4 சதவீத வாக்குகளே கூடுதலாகக் கிடைக்கவுள்ளன. இதன் மூலம் அதிமுக கூட்டணிக்கு மொத்தம் 39 சதவீத வாக்குகள் கிடைக்கவுள்ளன.

அதாவது திமுக கூட்டணிக்கு 41 சதவீதமும் அதிமுக கூட்டணிக்கு 39 சதவீதமும் வாக்குகள் கிடைக்கும். இதன்மூலம் திமுக கூட்டணி 20 முதல் 22 இடங்களிலும் அதிமுக கூட்டணி 18 முதல் 20 இடங்களிலும் வெல்லும் என்று கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில் விஜய்காந்துக்கு 12 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. ஆனாலும் அவரது கட்சிக்கு ஒரு இடத்தில் கூட வெற்றி கிடைகாது.

வழக்கமாக திமுகவுக்கு எதிரான வாக்குகள் அப்படியே அதிமுகவுக்கும் அதிமுகவுக்கு எதிரான வாக்குகள் அப்படியே திமுகவுக்கும் செல்வதை விஜய்காந்த் தடுக்கிறார். இதன்மூலம் மத்திய காங்கிரஸ் அரசு, மாநில திமுக அரசுக்கு எதிரான வாக்குகள் இம்முறை ஜெயலிலதாவை முழுமையாக அடைவதை தேமுதிக தடுக்கிறது.

இதனால் அதிமுகவுக்குக் கிடைக்க வேண்டிய பெரும் வெற்றி தடைபடுகிறது.

அதே நேரத்தில் விஜய்காந்த் திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்தால் அந்தக் கூட்டணியே அனைத்து 39 இடங்களிலும் வெல்லும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

thanks ykr suresh / pjr

0 Comments:

Post a Comment

<< Home