tamiltimes

Monday, April 06, 2009

TN POLLS பிரணாய் ராய் கருத்து

தமிழகத்தில் ஆளும் திமுக அரசுக்கு எதிரான வாக்குகள் அதிமுகவுக்குச் செல்வதற்கு பதிலாக விஜய்காந்த் பக்கம் போய்க் கொண்டுள்ளதாகவும் இதனால் இந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு முழு வெற்றி கிடைக்காது என்றும் என்டிடிவி நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

மக்களவைத் தேர்தலையொட்டி நாடு முழுவதும் சுமார் 50,000 பேரிடம் என்டிடிவி கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது. அதை அந்தத் தொலைக்காட்சியி்ன் தலைவர் பிரணாய் ராய் மற்றும் கருத்துக் கணிப்பை ஒருங்கிணைத்த தோராப் சுபாரிவாலா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

இதன்படி கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி (காங்கிரஸ், பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்) மொத்தம் 57 சதவீத வாக்குகளைப் பெற்று தமிழகத்தில் 39 தொகுதிகளையும் கைப்பற்றியது.

அதிமுக-பாஜக கூட்டணி 35 சதவீத வாக்குகளைப் பெற்றது. அந்தத் தேர்தலில் விஜய்காந்த்தின் தேமுதிக களத்தில் இல்லை.

இந் நிலையில் திமுக கூட்டணியில் இருந்த மதிமுக, பாமக, இடதுசாரிகள் ஆகியோர் இப்போது அதிமுக கூட்டணிக்குச் சென்றுவிட்டன. திமுகவுடன் காங்கிரஸ் மட்டுமே அணி அமைத்துள்ளது. தேமுதிக தனித்துப் போட்டியிடுகிறது.

இந் நிலையில் என்டிடிவி நடத்தியுள்ள கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ள முடிவுகள்:

பாமக, மதிமுக, இடதுசாரிகள் போய்விட்டதால் திமுக கூட்டணிக்கு 6 சதவீத வாக்குகள் குறையும். மேலும் கடந்த முறை திமுக கூட்டணிக்கு வாக்களித்தவர்களில் 10 சதவீதம் பேர் விஜய்காந்துக்கு வாக்களிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் மொத்தத்தில் திமுக கூட்டணி இழக்கும் வாக்குகள் 16 சதவீதமாகும். இதனால் கடந்த தேர்தலில் 57 வாக்குகள் பெற்ற திமுக கூட்டணி இம்முறை 41 சதவீத வாக்குகளையே பெறும்.

அதே போல மதிமுக, பாமக, இடதுசாரிகள் இணைந்ததால் அதிமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் 6 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால் கடந்த முறை அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தவர்களில் 2 சதவீதம் பேர் விஜய்காந்துக்கு வாக்களிக்கப் போவதாக கூறியுள்ளனர். இதனால் அதிமுகவின் வாக்கு சதவீதத்தில் 2 சதவீதம் சரிவும் ஏற்பட்டுள்ளது.

இதனால் மொத்தத்தில் அதிமுக கூட்டணிக்கு 4 சதவீத வாக்குகளே கூடுதலாகக் கிடைக்கவுள்ளன. இதன் மூலம் அதிமுக கூட்டணிக்கு மொத்தம் 39 சதவீத வாக்குகள் கிடைக்கவுள்ளன.

அதாவது திமுக கூட்டணிக்கு 41 சதவீதமும் அதிமுக கூட்டணிக்கு 39 சதவீதமும் வாக்குகள் கிடைக்கும். இதன்மூலம் திமுக கூட்டணி 20 முதல் 22 இடங்களிலும் அதிமுக கூட்டணி 18 முதல் 20 இடங்களிலும் வெல்லும் என்று கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில் விஜய்காந்துக்கு 12 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. ஆனாலும் அவரது கட்சிக்கு ஒரு இடத்தில் கூட வெற்றி கிடைகாது.

வழக்கமாக திமுகவுக்கு எதிரான வாக்குகள் அப்படியே அதிமுகவுக்கும் அதிமுகவுக்கு எதிரான வாக்குகள் அப்படியே திமுகவுக்கும் செல்வதை விஜய்காந்த் தடுக்கிறார். இதன்மூலம் மத்திய காங்கிரஸ் அரசு, மாநில திமுக அரசுக்கு எதிரான வாக்குகள் இம்முறை ஜெயலிலதாவை முழுமையாக அடைவதை தேமுதிக தடுக்கிறது.

இதனால் அதிமுகவுக்குக் கிடைக்க வேண்டிய பெரும் வெற்றி தடைபடுகிறது.

அதே நேரத்தில் விஜய்காந்த் திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்தால் அந்தக் கூட்டணியே அனைத்து 39 இடங்களிலும் வெல்லும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

thanks ykr suresh / pjr
சென்னை: திமுகவில் 8 எம்.பிக்களுக்கு மீண்டும் சீட் கிடைத்துள்ளது. டி.ஆர்.பாலு உள்ளிட்ட 3 பேர் தொகுதி மாறி போட்டியிடுகின்றனர்.

திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் தற்போது எம்.பிக்களாக உள்ள 8 பேருக்கு மீண்டும் சீட் கிடைத்துள்ளது. அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ராசா மற்றும் ஆதிசங்கர் ஆகியோர் தொகுதி மாறி போட்டியிடுகின்றனர்.

மற்றவர்கள் புதுமுகம் மற்றும் முன்னாள் எம்.பிக்கள் ஆவர்.

தென் சென்னையில் நான்கு முறை எம்.பியாக இருந்த டி.ஆர்.பாலு இம்முறை ஸ்ரீபெரும்புதூருக்குப் போயுள்ளார்.

அங்கு ஆர்.எஸ்.பாரதி புதுமுகமாக போட்டியிடுகிறார். இவர் திமுக வக்கீல்கள் பிரிவு செயலாளர் ஆவார். தற்போது ஆலந்தூர் நகராட்சித் தலைவராக இருக்கிறார்.

வட சென்னையில் 3 முறை எம்.பியாக இருந்த செ.குப்புசாமிக்குப் பதில் டி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.

மத்திய சென்னையில் 2வது முறையாக தயாநிதி மாறன் போட்டியிடுகிறார்.

புதிதாக உருவாக்கப்பட்டுளள திருவள்ளூர் தனி தொகுதியில் காயத்ரி ஸ்ரீதரன் போட்டியிடுகிறார்.

கிருஷ்ணகிரியில் மீண்டும் இ.ஜி.சுகவனமே போட்டியிடுகிறார். 2வது முறையாக அவருக்கு சீட் கிடைத்துள்ளது.

தர்மபுரியில் தாமரைச்செல்வன் புதுமுகமாக களம் இறங்கியுள்ளார். இங்கு திமுக போட்டியிடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அரக்கோணத்தில் 1999ம் ஆண்டுக்குப் பின்னர் மீண்டும் திமுக போட்டியிடுகிறது. அந்த ஆண்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்ற ஜெகத்ரட்சகனே மீண்டும் இம்முறையும் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில்தான் ஜெகத்ரட்சகன் திமுகவில் இணைந்தார் என்பது நினைவிருக்கலாம்.

புதிதாக உருவாக்கப்பட்ட திருவண்ணாமலை தொகுதியில் வேணுகோபால் களம் இறங்குகிறார். இவர் இதுவரை திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வந்தார். அத்தொகுதியில் நான்கு முறை எம்.பியாக இருந்தவர் வேணுகோபால் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை வந்தவாசி தொகுதியாக இருந்ததுதான் தற்போது திருவண்ணாமலையாக மாறியுள்ளது. இங்கு 1971ம் ஆண்டுக்குப் பின்னர் இப்போதுதான் திமுக முதல் முறையாக போட்டியிடுகிறது.

பொள்ளாச்சியில் சண்முகசுந்தரம் புதுமுகமாக களம் இறங்குகிறார்.

கரூரில் கே.சி.பழனிச்சாமி 2வதுமுறையாக மீண்டும் போட்டியிடுகிறார்.

பெரம்பலூரில் இதுவரை போட்டியிட்டு வந்த ராசா நீலகிரிக்கு இடம் மாறியுள்ளார். அவருக்குப் பதில் நெப்போலியன் போட்டியிடுகிறார்.

தஞ்சாவூரில் 5வது முறையாக பழனிமாணிக்கம் போட்டியிடுகிறார்.

மதுரையில் முதல் முறையாக ...

மதுரையில் முதல் முறையாக திமுக போட்டியிடுகிறது. அக்கட்சியின் வேட்பாளராக மு.க.அழகிரி களம் காணுகிறார். அழகிரி தேர்தல் ஒன்றில் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.

அழகிரியின் அரசியல் வாழ்க்கையில் இந்தத் தேர்தல் முக்கியமானதாக கருதப்படுகிறது.

இதுவரை கட்சிப் பணிகளை மறைமுகமாக செய்து வந்த அழகிரிக்கு சமீபத்தில்தான் தென் மாவட்ட திமுக அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து தற்போது எம்.பி. சீட் தரப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் தற்போதைய எம்.பி. பவானி ராஜேந்திரனுக்கு சீட் மறுக்கப்பட்டு, நடிகர் ஜே.கே.ரித்தீஷ் வேட்பாளராகியுள்ளார். இவர் தேர்தல் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும். அமைச்சர் சுப.தங்கவேலனின் பேரன்தான் ரித்தீஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

கடலூரில் தொகுதியில் 1999ம் ஆண்டு போட்டியிட்டு எம்.பி. ஆன ஆதிசங்கர், இம்முறை கள்ளக்குறிச்சி வேட்பாளராகியுள்ளார்.

நாகப்பட்டனம் தனி தொகுதியில் ஏ.கே.எஸ்.விஜயன் 3வது முறையாக களம் காண்கிறார்.

தூத்துக்குடியில் புதுமுகம் ஜெயதுரையும், கன்னியாகுமரியில் புதுமுகம் ஹெல்ன் டேவிட்சனும் வேட்பாளர்களாகியுள்ளனர்.

நாமக்கல் தொகுதியில், காந்தி செல்வன் புதுமுகமாக களம் இறங்கியுள்ளார்.

வேட்பாளர்களில் நெப்போலியன், ஜே.கே.ரித்தீ்ஷ் ஆகியோர் நடிகர்கள். இவர்களில் நெப்போலியன் ஒரு முறை எம்.எல்.ஏவாக (வி்ல்லிவாக்கம்) இருந்துள்ளார். கடந்த சட்டசபைத் தேர்தலில் மயிலாப்பூர் தேர்தலில் போட்டியிட்டு எஸ்.வி.சேகரிடம் தோல்வி அடைந்தார்.

சிறுபான்மையின சமூகத்தில் கிறிஸ்தவ சமூகத்திற்கு மட்டும் திமுக வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைத்துள்ளது. முஸ்லீ்ம் சமுதாயத்தினர் யாரும் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.